கியூபெக் மாகாணத்தில் உள்ள டெரெபோன் (Terrebonne) தொகுதியில் நடைபெற்ற தேர்தல் முடிவைச் செல்லாது என அறிவித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டில், பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெறும் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், தேர்தல் ஆணையத்தின் தவற்றினால் ஒரு வாக்கு எண்ணப்படாமல் போனமை உறுதி செய்யப்பட்டது.
இதனை அடுத்தே, உச்ச நீதிமன்றத்தினால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ள டெரெபோன் தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இரு பிரதான கட்சிகளும் ஏற்கனவே அங்கு போட்டியிட்ட அதே வேட்பாளர்களையே மீண்டும் களமிறக்குகின்றன. ஒவ்வொரு வாக்கிற்கும் மதிப்பு உண்டு என்பதை இந்தத் தீர்ப்பு
உறுதிப்படுத்தியுள்ளது என பிளாக் கியூபெக்வா கட்சித் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் அரசுக்கு இந்தத் தீர்ப்பு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது. நாட்டின் நாடாளுமன்றத்தில் தற்போது லிபரல் கட்சிக்கு 169 இடங்கள் உள்ளன.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற 172 இடங்கள் தேவை என்ற நிலை காணப்படுகின்றது. டெரெபோன் உட்பட காலியாக உள்ள மூன்று தேர்தல் தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, பிரதமர் மார்க் கார்னியின் அரசால், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்னும் நிலை ஏற்பட்டுள்ளது.
