மன்னார் நகர சபையினால் கடந்த கால தலைமைத்துவத்தின் கீழ் சைனா பஜார் கடைகளை குத்தகைக்கு வழங்கிய போது பல்வேறு ஊழல் மோசடி இடம் பெற்றுள்ளதாக மன்னார் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இன்றைய தினம் வியாழக்கிழமை தேசிய கணக்காய்வு அலுவலக பிரதிநிதிகள் மன்னாரிற்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த கால தலைமைத்துவத்தின் கீழ் மன்னார் நகர சபையினால் வழங்கப்பட்ட சைனா பஜார் கடைகளை குத்தகைக்கு வழங்கி போது பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில்,மன்னார் நகர சபைக்கு 5 கோடியே 31 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மேலதிக நடவடிக்கைகளுக்கு இன்றைய தினம் மன்னாரிற்கு வருகை தந்த தேசிய கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் மன்னார் நகர சபைக்குச் சென்று நகர சபைத் தலைவரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர் மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவரின் நெருங்கிய உறவினர்களிடம் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது மேலும் 10 லட்சம் ரூபாய் நகர சபைக்கு வருமானம் இழப்பு கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாகவும்,மேலதிக நடவடிக்கைகளை குறித்த அலுவலக அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் தெரிய வருகிறது.


