உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் தாக்கங்கள் அதிகரித்துள்ள நிலையில் குழந்தைகளை பாதுகாக்க சகல நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
தற்போது, ஆஸ்திரேலியாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக் டாக், யு டியூப், ஸ்னாப்சாட் இதுபோன்ற பல்வேறு சமூக ஊடகங்களின் பயன்பாட்டால் குழந்தைகளின் மனம், உடல் நலம் பாதிக்கப்படுவதுடன்,சமூக சீர்கேடுகள் என அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ் பல விடயங்களை முன்வைத்தார்.
இதையடுத்து, ஆன்லைனில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, அவற்றை தடை செய்யவேண்டும் என பாராளுமன்றத்தில் வலியுறுத்திய போது, இதற்கு எதிர்க்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்நிலையில், ”ஆன்லைன் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2024” என்ற பெயரில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டம், 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை தொடங்கவோ, பயன்படுத்தவோ தடை செய்கிறது. இது வரும் டிசம்பர் 10-ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தியளித்துள்ளன.
