நாட்டில் வன்முறை மற்றும் தொடர் குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், கடுமையான பிணை (Bail) மற்றும் தண்டனைச் சட்டங்களை
உள்ளடக்கிய புதிய குற்றவியல் மசோதாவை (Crime Bill) அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நேற்று அறிவித்தார்.
பொதுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூகத்தில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் குற்றவாளிகளைத் தெருக்களில் இருந்து விலக்கி வைக்கவும்
இந்தச் சட்டத் திருத்தங்கள் உதவும் என அவர் தெரிவித்துள்ளார். புதிய சட்டத்தின் முக்கிய அம்சமாக பிணை விதிமுறைகளில் செய்யப்படவுள்ள மிகப்பெரிய மாற்றம் காணப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய சட்டத்தின் கீழ், குற்றம் சாட்டப்பட்டவரை ஏன் காவலில் வைத்திருக்க வேண்டும் என்பதை அரசுத் தரப்பே நிரூபிக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது. உருவாகவுள்ள புதிய சட்டமானது, குற்றம் சாட்டப்பட்டவர்கள், விசாரணை முடியும் வரை தாங்கள் ஏன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
முன்னெடுக்கப்படவுள்ள சட்ட ரீதியான மாற்றங்களைத் தவிர, நாடு முழுவதும் காவல்துறையினரின் திறனை அதிகரிப்பதற்காக குறிப்பிடத்தக்க நிதியுதவியையும் பிரதமர் அறிவித்தார். சிறையிலிருந்து பிணையில் வெளிவந்து வன்முறைச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கையாளுவதற்கு, வலுவான சட்டங்கள் தேவை என்ற எதிர்க்கட்சிகள், மாகாண முதல்வர்கள் மற்றும் காவல்துறைத் தரப்பினரின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு, இந்தக் கடுமையான நடவடிக்கைகள் பதிலளிப்பதாகப் பிரதமர் கார்னி தெரிவித்துள்ளார்.
