ஹைட்ரோ-கியூபெக் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் யூஷெங் வாங் (Yuesheng Wang) மீதான பொருளாதார உளவு வழக்கில் சில தகவல்களை பொதுவெளியில் இருந்து மறைப்பதற்கு, அந்த நிறுவனம் மேற்கொண்ட கடைசி நேர முயற்சியை, கியூபெக் மாகாண நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.
தகவல்கள் வெளியிடப்படுவதால் அதன் வணிக நலன்களுக்கு “தீவிரமான மற்றும் உண்மையான ஆபத்து” ஏற்படும் என, அந்த நிறுவனம் தனது மனுவில் குறிப்பிட்டது.
எனினும், அவ்வாறான ஆபத்து ஏற்படும் என்பதை நிரூபிப்பதற்கு, ஹைட்ரோ-கியூபெக்கின் வழக்கறிஞர்கள் தவறிவிட்டதாக நீதிபதி மார்கூ தனது வாய்மொழித் தீர்ப்பில் கூறினார்.
மேலும், ஹைட்ரோ-கியூபெக் நிறுவனம் இரகசியமாக வைத்திருக்குமாறு கோரிய தகவல்கள் உண்மையான வணிக இரகசியமாகக் கருத முடியாத அளவுக்கு மிகவும் பொதுவானவை என்றும் நீதிபதி மார்கூ முடிவு செய்தார்.
இந்த வழக்கில் தங்கள் கூட்டாளிகள் மற்றும் அவர்களது முக்கியத் தகவல்கள் வெளிப்படுவதைத் தடுப்பதே ஹைட்ரோ-கியூபெக்கின் முதன்மை நோக்கம் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
பொதுப்பயன்பாட்டு நிறுவனமான ஹைட்ரோ-கியூபெக் தாக்கல் செய்த மனுவின் காரணமாக, இந்த வழக்கின் விசாரணை நான்கு நாட்கள் தாமதமானது.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட வழக்கின் விசாரணை இப்போது தொடங்குவதற்கு நீதிபதியின் இந்த உத்தரவு வழிவகுத்துள்ளது.
