கியூபெக்கில், பொது இடங்களில் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகள் மற்றும் முகமூடிகளுக்கு முழுத் தடை விதிக்கக் கோரும் பிரேரணைக்கு ஆளும் சி.ஏ.க்யூ (CAQ) கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்தக் கோரிக்கை குறித்து அடுத்த சில மாதங்களில் ஆளும் அரசு பரிசீலனை செய்யும் என்று கியூபெக் மாகாண முதல்வர் ஃபிராங்கோயிஸ் லெகோ (François Legault) தெரிவித்துள்ளார்.
கெட்டினோவில் நடந்த கட்சியின் கொள்கை மாநாட்டில், சி.ஏ.க்யூ இளைஞர் பிரிவினர் முதலில் முகமூடி அணிந்த போராட்டங்களுக்கும் (masked protests) பொது மற்றும் தனியார் இடங்களில் முகாம்களுக்கும் (encampments) தடை விதிக்கக் கோரி தீர்மானத்தை முன்வைத்தனர்.
முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கான இந்தத் தடை, வெறும் இரண்டு வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது.
மதச்சார்பின்மைக்கு பொறுப்பான அமைச்சர் ஜீன்-ஃபிராங்கோயிஸ் ரோபர்க் (Jean-François Roberge) உட்பட பல அமைச்சர்களும் இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இந்தத் தடை பொதுப் பாதுகாப்பை (public security) உறுதிப்படுத்துவதுடன், அரச மதச்சார்பின்மையை (state secularism) மேலும் பலப்படுத்தும் என்று மதச்சார்பின்மை அமைச்சர் ரோபர்க் கூறியுள்ளார்.