ஒன்டாரியோ முதல்வர் டக் ஃபோர்ட், போக்குவரத்து வேகக் கேமராக்களை நீக்குவதாக அச்சுறுத்தியுள்ள நிலையில், மாகாணத்தில் உள்ள காவல்துறைத் தலைவர்கள் அதற்கு எதிராக வலுவாகக் குரல் கொடுத்துள்ளனர்.
இந்த தானியங்கி வேகக் கட்டுப்பாட்டுக் கேமராக்கள் வேகத்தை திறம்படக் குறைப்பதாகவும், அதனால் காவல்துறையினர் மக்களுக்கான மற்ற பொது பாதுகாப்புப் பணிகளில் கவனம் செலுத்த உதவுவதாகவும் ஒன்டாரியோ காவல்துறைத் தலைவர்கள் சங்கம் (OACP) தெரிவித்துள்ளது.
சமீபத்தில் டொராண்டோவில் 17 வேகக் கேமராக்கள் சேதப்படுத்தப்பட்ட சம்பவங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, முதல்வர் ஃபோர்ட், இந்த கேமராக்களை “பணத்தைக் கறக்கும் கருவி” என்று கூறியிருந்தார்.
மாகாணத்திலுள்ள நகராட்சிகள் அவற்றை நீக்கத் தவறினால், தனது மாகாண அரசே அவற்றை அகற்றும் என்றும் அவர் அச்சுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் வெளியாகியுள்ள ஒண்டாரியோ காவல்துறை அலுவலர் ஒன்றியத்தின் அறிக்கையானது, ஃபோர்டின் “பணத்தைக் கறக்கும் கருவி” என்ற குற்றச்சாட்டை நேரடியாக மறுத்துள்ளது.
காவல்துறைத் தலைவர்கள் இந்த கேமராக்களை வருமானம் ஈட்டும் கருவியாக அல்லாமல், ஒரு போக்குவரத்து பாதுகாப்பு கருவியாகவே தாம் கருதுவதாகக் கூறியுள்ளனர்.
