பிரதமர் மார்க் கார்னி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோரிடையே, இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் குறித்த காலக்கெடு முடிவடைந்த பிறகு, முதல்முறையாக தொலைபேசி உரையாடல் நடைபெற்றுள்ளது.
இந்த உரையாடல், ‘தற்போதைய வர்த்தக சவால்கள், வாய்ப்புகள் மற்றும் பகிரப்பட்ட முன்னுரிமைகள்’ குறித்து அமைந்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்குள் கனடா மற்றும் அமெரிக்கா இடையே, புதிய வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படும் என, இரு நாட்டுத் தலைவர்களும் ஜி7 உச்சிமாநாட்டில் ஒப்புக்கொண்டனர்.
எனினும், ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன.
நல்லதொரு ஒப்பந்தம் உருவாகாமையால் கனடா தரப்பில் தாம் பின்வாங்கியதாக வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்ளாங் தெரிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், பிரதமர் கார்னி முன்முயற்சியால், ட்ரம்புடனான இந்த தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.
வர்த்தகம் மட்டுமின்றி, கனடா-அமெரிக்கா இடையே புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளை உருவாக்குவது குறித்தும் கார்னி பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
