துருக்கியின் மேற்கு மாகாணமான இஸ்மிரில் இரண்டாவது நாளாகவும் நேற்று காட்டுத்தீ வேகமாகப் பரவியது. இத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்மிரின் குயுகாக் மற்றும் டோகன்பே பகுதிகளில் ஏற்பட்ட தீ, இரவு முழுவதும் மணிக்கு 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசிய காற்று காரணமாக மேலும் நான்கு கிராமங்களிலும் இரண்டு சுற்றுப்புறங்களிலும் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டதாக வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யுமக்லி நேற்று கூறினார்.
இத் தீயை அணைக்கும் முயற்சியில் ஹெலிகொப்டர்கள், விமானங்கள் மற்றும் பிற வாகனங்களுடன் 1,000 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தீ விபத்து காரணமாக இஸ்மிர் அட்னான் மெண்டரெஸ் விமான நிலையத்தின் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டதாக துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்மிரில் உள்ள செஃபெரிஹிசார் மற்றும் மெண்டரெஸ் மாவட்டங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை முதல் இத் தீ விபத்து ஏற்பட்டது. காற்று வேகமாக வீசியதால் தீ வேகமாக பரவியது என்று ஆளுநர் சுலேமான் எல்பன் கூறினார்.
