கனடாவின் பிரதமர் மார்க் கார்னியின் அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட “வலுவான எல்லைகள் சட்டம்” (Strong Borders Act) எனப் பெயரிடப்பட்ட புதிய சட்டமூலம், வழக்கறிஞர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.
இந்த 140 பக்கங்களடங்கிய சட்டமூலத்தில் மறைந்துள்ள சில அம்சங்கள், கனடியர்களின் தனியுரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும், எல்லைப் பாதுகாப்புடன் தொடர்பில்லாத பல விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குறிப்பாக, காவல்துறையினர் பிடியாணை இல்லாமல் இணையப் பாவனையாளர்களின் தகவல்களை அணுகுவதற்கு அனுமதிக்கும் விதிகள் குறித்து அதிக கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய பகுதிகள் “சட்டரீதியான அணுகல்” (Lawful Access) தொடர்பானவை.
இதன் மூலம், காவல்துறையினர் இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் இணையச்சேவை நிறுவனங்களிடமிருந்து அடிப்படை சந்தாதாரர் தகவல்களை, நீதிமன்றத்தின் பிடியாணை இல்லாமல் கோர முடியும்.
கனடாவின் காவல்துறையினர் இவ்வாறான “சட்டரீதியான அணுகல்” அதிகாரங்களுக்காக இருபது ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரி வருகின்றனர்.
இதற்கு முன் பலமுறை இவ்வாறான சட்டங்களை இயற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவை தோல்வியடைந்தன.
2014 ஆம் ஆண்டில், முன்னாள் ஹார்ப்பர் அரசாங்கம் இதேபோன்ற சட்டத்தை நிறைவேற்ற முயற்சித்து, தோல்வியடைந்தது.
தற்போதுள்ள கார்னி அரசாங்கமும் இந்த அதிகாரங்களை நியாயப்படுத்த, குழந்தை பாதுகாப்பை ஒரு காரணமாக முன்வைத்துள்ளது.
கனேடிய குழந்தை பாதுகாப்பு மையம் (Canadian Centre for Child Protection) போன்ற அமைப்புகள், சட்டரீதியான அணுகலின் ஒரு வடிவத்தை ஆதரிக்கின்றன.
ஐபி முகவரியை ஒரு சந்தேக நபருடன் இணைக்க பிடியாணை பெறுவதற்கு பல மாதங்கள் ஆகலாம் என்றும், இதனால் முக்கியமான ஆதாரங்கள் இழக்கப்படலாம் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
கனேடிய காவல் துறை தலைவர்கள் சங்கத்தைச் சேர்ந்த தோமஸ் கேரிக் (Thomas Carrique) கூறுகையில், குற்றவாளிகள் பயன்படுத்தும் மேம்பட்ட தகவல் தொடர்பு மற்றும் குறியாக்க தொழில்நுட்பங்கள் தற்போதைய சட்டங்களை விட மிக வேகமாக வளர்ச்சியடைந்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் “கட்டுப்பாடற்ற அணுகலை” கோரவில்லை என்றும், “நியாயமான சந்தேகத்தின்” அடிப்படையில் “மிகக் குறைந்த தகவல்களை” மட்டுமே கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.