காணாமல் போன உறவுகளுக்கு என்ன நடந்தது என்று அறியாமலே பலர் மரணித்துள்ளனர்.
எனவே எஞ்சியுள்ள நாங்களும் இறக்கும் முன்னர் எமக்கான நீதி கிடைக்க வேண்டும் என்று வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது.
அதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
எமக்கான நீதிகோரி நாங்கள் தொடர்ச்சியாக போராடி வரும் நிலையில் 300 ற்கும் மேற்ப்பட்ட உறவுகளை இழந்துள்ளோம். தங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலே அவர்கள் இறந்துள்ளனர்.
எனவே மீதமுள்ள சாட்சிகளாக உள்ள நாங்களும் இறக்கும் முன்பாக எமக்கான நீதியை சர்வதேசம் வழங்கவேண்டும். கொலைக்குற்றங்களை செய்த அரச படைகளை விசாரிக்க இயலாத அரசாங்கம் தமிழ் இனத்தை ஏமாற்றி வருகின்றது.
எனவே எதிர்வரும் ஐநா கூட்டத்தொடரிலாவது எமக்கான சர்வதேச நீதிப்பொறிமுறையூடான நீதி ஒன்றை வழங்கவேண்டும் என்று கேட்கின்றோம் என அவர்கள் கூறியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
