ஒன்டாரியோ மற்றும் மனிடோபா மாகாண அரசுகள், தமது மாகாணங்களுக்கு இடையே, பொருட்கள், சேவைகள் மற்றும் தொழிலாளர்கள் செல்வதற்கான தடைகளை குறைக்க
ஒப்புக்கொண்டுள்ளன.
கனேடிய உற்பத்திகள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு நெருக்கடிக்கு மத்தியில், அந்த மாகாணங்கள் இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளன. ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட் மற்றும் மனிடோபாவின் முதல்வர் வாப் கினேவ் ஆகியோர் இது தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட்டின் அரசாங்கம் சமீபத்தில் நோவா ஸ்கோடியா மற்றும் நியூ பிரன்சுவிக் ஆகிய மாகாணங்களுடனும் இதேபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட், கனேடிய மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தக தடைகள் தேசிய பொருளாதாரத்திற்கு ஆண்டுதோறும் 200 பில்லியன் டாலர் செலவை ஏற்படுத்துகின்றன என்றார். அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் வரிகளைப் போலவே, இவை கனேடியர்களுக்குள் பிரிவை உண்டாக்கி பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளுகின்றன என அவர் கூறியுள்ளார். தாம் மேலும் பிற கனேடிய மாகாணங்களுடனும் இது போன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் ஒன்டாரியோவின் முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்டாரியோவிலிருந்து மனிடோபாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்களில் வீட்டு உபயோகப் பொருட்கள், உணவு மற்றும் பானங்கள் ஆகியவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிடோபாவிலிருந்து ஒன்டாரியோவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முக்கிய பொருட்கள் கனோலா எண்ணெய் பொருட்கள் மற்றும் வழக்கமான கச்சா
எண்ணெய் முதலானவையாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
