பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி அரசாங்கம் இந்த ஆண்டு முழுமையான வரவு-செலவுத் திட்டத்தை வெளியிடாது என்று, நிதி அமைச்சர் பிரான்சுவா-பிலிப்(François-Philippe) ஷாம்பெயின் அறிவித்தார்.
கடந்த மாதம் நடந்த தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கம் பல அவசரமான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்த முடிவு, வெளி வந்துள்ளது.
தாம் வாக்குறுதியளித்த வரிக்குறைப்புக்கான சட்டத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும் பிரதமர் மார்க் கார்னி, இந்த வரிக்குறைப்பை எதிர்வரும்
கனடா தினத்திற்குள் நடைமுறைப்படுத்த இலக்கு வைத்துள்ளார்.
ஜூன் மாதத்தில் நாடாளுமன்றப் பொதுச்சபை ஒத்திவைக்கப்படுவதற்கு முன்பு இந்த விடயத்துக்கே மிக முக்கியமான முன்னுரிமை அளிக்கப்படுமென, நிதி அமைச்சர் ஷாம்பெயின் வலியுறுத்தினார். வரிக்குறைப்பு உட்பட முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அரசாங்கம் நிறைவேற்றும் அதே வேளையில், கனடாவின் புதிய அரசாங்கம் தனது
ஒட்டுமொத்த செலவினத்தையும் இலையுதிர் கால பொருளாதார அறிக்கையில் தெரிவிக்கும் என்று ஷாம்பெயின் கூறினார்.
இதேவேளை, கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் Pierre Poilievre இந்த முடிவை "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று விமர்சித்துள்ளார். பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கம் "தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகுவதாகவும் தாமதங்களையும் செயலிழப்புகளையும் வழங்குவதாகவும் Pierre Poilievre குற்றம் சாட்டினார்.
