ஒட்டாவா நகரத்தில் மறைந்த நடிகர் மத்தியூ பெர்ரியின் பெயரில் போதை மீட்பு இல்லம் அமைக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு வெளிப்பட்டுள்ளது.
இந்த போதை மீட்பு இல்லம் பசுமையான நிலப்பரப்பை ஆக்கிரமிக்கும் என்று, எதிர்ப்பை வெளிப்படுத்திய குழுவினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், மீட்பு இல்லம் அமைக்கும் இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள், இந்த குழு தவறான தகவல்களைப் பரப்புவதாக குற்றம் சாட்டுகின்றனர்.
“பொது அறிவு திட்டமிடல் கூட்டணி” என்ற அமைப்பு, ஒட்டாவா மனநல நிலையமான தி ராயலின் வளாகத்தில், மத்தியூ பெர்ரி இல்லத்தை கட்டும் செயலானது, “மதிப்புமிக்க சமூக பசுமை இடத்தை” வீணடிக்கும் என்று கூறுகிறது.
இந்த திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில் அந்த போதை மீட்பு இல்லத்தை கட்ட வேண்டும் என்று, அந்த அமைப்பு தெரிவிக்கின்றது.
ஒட்டாவாவில் வளர்ந்தவரும், தொலைக்காட்சி தொடரான “ஃபிரண்ட்ஸ்” இல் சாண்ட்லர் பிங் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவருமான மத்தியூ பெர்ரி 2023 ஆம் ஆண்டில் கெட்டமைன் என்ற போதைப்பொருளின் அதிகப்படியான பயன்பாட்டால் தற்செயலாக இறந்தார்.
அவர் இறந்த பிறகு, பெர்ரியின் சகோதரி மற்றும் பலரால், அவரது நினைவாக மத்தியூ பெர்ரி அறக்கட்டளை நிறுவப்பட்டது.
போதை மீட்பு இல்லத்திற்கான திட்டத்தின் பின்னணியில் இந்த அறக்கட்டளை உள்ளமை குறிப்பிடத் தக்கது.