அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகத்தின் கீழ் ஏற்பட்டுள்ள தற்போதைய “அரசியல் சூழ்நிலை”காரணமாக, கனடியர்கள் எல்லை தாண்டும்போது சிரமங்களை எதிர்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்காவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கனடாவின் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் தேசிய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கனடிய பல்கலைக்கழக ஆசிரியர்களின் சங்கம் தனது உறுப்பினர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட பயண ஆலோசனையை நேற்று வெளியிட்டது.
அமெரிக்காவுடன் பதட்டமான உறவுகளைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்த கல்வியாளர்கள் அல்லது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் நிர்வாகத்தை பகிரங்கமாக விமர்சித்தவர்கள் குறித்து, அந்த ஆலோசனை ஆவணம் தனது கரிசனத்தைத் தெரிவிக்கிறது.
குறிப்பாக, தற்போதைய அமெரிக்க அரசாங்கத்தின் கருத்துக்களுடன் முரண்படும் ஆராய்ச்சியை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாற்றுப்பாலினத்தவர்களாக அடையாளம் காணப்படுபவர்கள் ஆகியோர், அமெரிக்கப் பயணத்தின் போது, கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த எச்சரிக்கை அறிவுறுத்துகிறது.
