தேசிய ஆசிரியர் இடமாற்ற கொள்கைகளை விரைவாக மறுசீரமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி, உயர்க்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
தற்போதுள்ள ஆசிரியர் இடமாற்ற கொள்கைகளுக்கு அமைய, மாகாண பாடசாலைகளிலிருந்து தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்றுக்கொள்ள 21 கடிதங்களை பரிமாற்றம் செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாக பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்தார்.
தற்போதுள்ள வழிமுறைக்கமைய, சில மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக தேசிய பாடசாலைகளிலிருந்து ஆசிரியர்களை இடமாற்றம் செய்வது சிக்கலாக மாறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படி, ஆசிரியர் இடமாற்ற கொள்கைகளை உடனடியாக மறுசீரமைப்பதற்கான சில கலந்துரையாடல்கள் நிறைவடைந்துள்ளன.
10 வருடங்களாக ஒரே பாடசாலையில் சேவை புரியும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான செயல்முறையும் இதனூடாக மாற்றம் செய்யப்படும் எனவும் கல்வி, உயர்க்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
ஆசிரியர்களுக்கு தங்களுடைய வீடுகளிலிருந்து அருகில் உள்ள பாடசாலைகளுக்கு செல்லக்கூடிய வகையில் புதிய ஆசிரியர் இடமாற்ற முறைமை உருவாக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அனைத்து ஆசிரியர்களும் பணிபரியும் இடம் தொடர்பான தரவுகள் சேகரிக்கப்படும் என பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன மேலும் குறிப்பிட்டார்.