உங்கள் வீட்டில் உள்ளோருக்கு பாஸ்தா என்றால் பிடிக்குமா? இதனால் உங்கள் வீட்டில் அடிக்கடி பாஸ்தா செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரி சிம்பிளாகத் தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை பாஸ்தா செய்வதாக இருந்தால், சிக்கன் பாஸ்தா செய்து கொடுங்கள்.
இந்த சிக்கன் பாஸ்தா செய்வது மிகவும் சுலபம். முக்கியமாக இப்படி சிக்கன் பாஸ்தாவை செய்து கொடுத்தால், உங்கள் வீட்டில் உள்ளோர் வழக்கமாக சாப்பிடுவதை விட அதிகமாக சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சிக்கன் பாஸ்தாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சிக்கன் பாஸ்தா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்: வேக வைப்பதற்கு…
* பாஸ்தா – 2 கப்
* தண்ணீர் – 6 கப்
* உப்பு – சிறிது
சோஸ் செய்வதற்கு…
* நன்கு கனிந்த தக்காளி – 1/2 கிலோ
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* பூண்டு – 4 பல் (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் – 1/2 (பொடியாக நறுக்கியது)
* மிளகாய் தூள் -1/2
* மிளகு தூள் – 1/2
* உப்பு – சுவைக்கேற்ப
* சர்க்கரை -1/2
* இத்தாலியன் சீசனிங் – 1 டீஸ்பூன்
பாஸ்தாவிற்கு…
* எலும்பில்லாத சிக்கன் – 200 கிராம்
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* குடைமிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
* சீஸ் – 1/2 கப் (துருவியது)
செய்முறை: * முதலில் பாஸ்தாவை வேக வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, நீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பாஸ்தாவை சேர்த்து, வேக வைத்து எடுத்து, நீரை வடிகட்டிவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு மூடி வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு சோஸ் செய்வதற்கு மிக்சர் ஜாரில் 1/2 கிலோ தக்காளியை போட்டு நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின் அதில் அரைத்த தக்காளியை சேர்த்து, அத்துடன் மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, பச்சை வாசனை நீங்கி தக்காளியில் உள்ள நீர் ஓரளவு வற்றும் வரை வேக வைக்க வேண்டும்.
* பின் அதில் சர்க்கரை மற்றும் இத்தாலியன் சீசனிங் சேர்த்து கிளறி 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு மிக்சர் ஜாரில் எலும்பில்லாத சிக்கனை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சிக்கனை சேர்த்து கிளறி விட வேண்டும்.
* பின்பு அதில் மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு சிக்கனை வேக வைக்க வேண்டும்.
* சிக்கன் நன்கு வெந்ததும், அதில் குடைமிளகாயை சேர்த்து 1 நிமிடம் வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் செய்து வைத்துள்ள சோஸை ஊற்றி கிளறி விட வேண்டும்.
* பின் வேக வைத்துள்ள பாஸ்தாவை சேர்த்து நன்கு கிளறி, 3 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* இறுதியாக சீஸை தூவி 2 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான சிக்கன் பாஸ்தா தயார்.