உங்கள் வீட்டில் தினமும் பொரியல் செய்வீர்களா? காய்கறிகளை சாப்பிட சிறந்த வழி அதை பொரியல் செய்து சாப்பிடுவது தான். ஆனால் சில காய்கறிகளைக் கொண்டு பொரியல் செய்தால், சிலருக்கு பிடிக்காது. அப்படி பொரியல் செய்தால் நிறைய பேர் சாப்பிட மறுக்கும் ஒரு பொரியல் தான் பீட்ரூட் பொரியல். ஏனெனில் பீட்ரூட் இனிப்பாக இருப்பதால், அந்த இனிப்புச் சுவையின் காரணமாக, அதை சாப்பிட நிறைய பேர் மறுப்பார்கள். ஆனால் பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. எனவே இந்த காயை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வருவது நல்லது. அதுவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளவாறு பீட்ரூட் பொரியல் செய்தால், பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு நல்ல சுவையான பீட்ரூட் பொரியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பீட்ரூட் பொரியல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்: வறுத்து பொடி செய்வதற்கு…
* சீரகம் – 1 டீஸ்பூன்
* மல்லி – 1 1/2 டீஸ்பூன்
* வேர்க்கடலை – 1/4 கப்
* கறிவேப்பிலை – 1 கொத்து
தாளிப்பதற்கு…
* எண்ணெய் – 2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
* கடுகு – 1 டீஸ்பூன்
* வரமிளகாய் – 1
* கறிவேப்பிலை – 1 கொத்து
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* பீட்ரூட் – 300 கிராம் (பொடியாக நறுக்கியது அல்லது துருவியது)
* மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – சிறிது
* வறுத்த பொடி – 3-4 டீஸ்பூன்
செய்முறை: * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், மல்லி, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து ஈரப்பதம் போக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின் அதில் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி வெங்காயத்தை கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் பொடியாக நறுக்கிய அல்லது துருவிய பீட்ரூட்டை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், சுவைக்கேற்ப உப்பு தூவி, சிறிது நீரைத் தெளித்து, மூடி வைத்து 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
* 4-5 நிமிடம் கழித்து மூடியைத் திறந்தால், பீட்ரூட் நன்கு மென்மையாக வெந்திருக்கும். அதன் பின் பொடித்து வைத்துள்ள பொடியை 3 டீஸ்பூன் சேர்த்து கிளறி 2 நிமிடம் வேக வைத்து இறக்கினால், சுவையான பீட்ரூட் பொரியல் தயார்.