பொங்கல் பண்டிகை அன்று சர்க்கரை பொங்கல் மட்டுமின்றி, சிலர் வெண் பொங்கலும் செய்வார்கள். நீங்கள் வெண் பொங்கல் செய்வதாக இருந்தால், ஒருமுறை வெண் பொங்கலை வித்தியாசமாக செய்து பாருங்கள். பொதுவாக வெண் பொங்கலுக்கு பாசிப்பருப்பை தான் சேர்ப்போம். ஆனால் பச்சை பயறை சேர்க்கும் போது சுவை இன்னும் அற்புதமாக இருக்கும். மேலும் இந்த பச்சை பயறு வெண் பொங்கல் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக ஒருமுறை பச்சை பயறு கொண்டு பொங்கல் செய்தால், பின் இப்படி தான் பொங்கல் செய்வீர்கள்.
உங்களுக்கு பச்சை பயறு வெண் பொங்கலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பச்சை பயறு வெண் பொங்கல் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி – 3/4 கப்
* பச்சை பயறு – 1/4 கப்
* நெய் – 1 டீஸ்பூன்
* தண்ணீர் – 3 1/2 கப்
* பச்சை மிளகாய் – 1
* உப்பு – சுவைக்கேற்ப
* சுடுநீர் – 1/2 கப்
தாளிப்பதற்கு…
* நெய் – 2 டீஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
* இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
* மிளகு – 1 1/2 டீஸ்பூன்
* சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி – தேவையான அளவு
* பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை – 1 கொத்து
செய்முறை: * முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மற்றும் பச்சை பயறை எடுத்து நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் நீரை ஊற்றி, 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* 2 மணிநேரம் கழித்து, அரிசி பருப்பை கழுவி, நீரை வடித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும், அரிசி மற்றும் பருப்பை சேர்த்து குறைவான தீயில் வைத்து நன்கு 2 நிமிடம் வறுக்க வேண்டும்.
* அதன் பின் அதில் 3 1/2 கப் நீரை ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, ஒரு கொதி வந்ததும் குக்கரை மூடி 6 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.
* விசில் போனதும், குக்கரைத் திறந்து, கரண்டியால் பொங்கலை நன்கு மசித்து கிளறி விட வேண்டும்.
* பொங்கல் மிகவும் கெட்டியாக இருந்தால், அதில் 1/2 கப் சுடுநீரை ஊற்றி, உப்பு சுவை பார்த்து வேண்டுமானால் உப்பையும் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய இஞ்சியை சேர்த்து நன்கு பொன்னிறமாக ப்ரை செய்ய வேண்டும்.
* பின் அதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து நன்கு தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் முந்திரியை சேர்த்து, குறைவான தீயில் வைத்து பொன்னிறமாக ப்ரை செய்ய வேண்டும்.
* அடுத்து அதில் பெருங்காயத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, பின் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இறக்கி, குக்கரில் உள்ள பொங்கலுடன் சேர்த்து நன்கு கிளறி, இறுதியாக 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி கிளறினால், சுவையான பச்சை பயறு வெண் பொங்கல் தயார்.