அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதே பகுதியில் சமீபத்தில் 2 மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாகப் பரவிய காட்டுத்தீ, கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்த, அந்தப் பகுதி முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிதாகப் பரவி வரும் காட்டுத்தீ காரணமாகச் சாண்டா கிளாரிட்டா அருகில் அமைந்துள்ள ஏரியைச் சுற்றி வசிக்கும் 31,000 பேரை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உலங்கு வானூர்தி மற்றும் விமானங்கள் மூலம் தீயணைப்புத் துறையும், ஏஞ்சலிஸ் தேசிய வனப்பகுதியைச் சேர்ந்த குழுவினரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.