மீன்பிடி தடை காலம் 60 நாட்கள் முடிந்து மீன் பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் வலையில் எதிர்பார்த்த மீன் பாடுகள் இல்லை. மேலும் மீனவர்கள் பிடித்து வந்த இறால், நண்டு, மீன்களுக்கு உரிய விலை கிடைக்காததால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததையடுத்து ராமேஸ்வரம், மண்டபம், தொண்டி, திருவாடானை உள்ளிட்ட மீன்பிடி துறைமுகங்களில் இருந்து சுமார் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று (15) அதிகாலை மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இன்று (6) அதிகாலை முதல் கரை திரும்பினர். மீன்பிடிக்க சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தாங்கள் எதிர்பார்த்த இறால், நண்டு, கணவாய் போன்ற விலை உயர்ந்த மீன்கள் அதிக அளவு கிடைக்காததால் மீனவர்கள் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.
மேலும், டீசல் விலை உயர்வு மற்றும் மீன்பிடி சாதனங்கள் விலை உயர்வு என கடும் சிரமத்திற்கு மத்தியில் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த குறைந்த அளவு இறால் மற்றும் நண்டு மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் சிண்டிகேட் அமைத்து கொண்டு உரிய விலை நிர்ணயம் செய்யாமல் ரூ. 700 க்கு விற்பனை செய்யப்பட்ட இறால் 300க்கு கொள்முதல் செய்வதால் மீனவர்கள் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
இதனால் 60 நாட்களுக்கு பிறகு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, மீன்பிடி தடை காலங்களில் அதிக திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்தும் நாட்டுப்படகைகளுக்கும் மீன்பிடிக்க தடை விதிக்க வேண்டும் மற்றும் மத்திய, மாநில அரசுகள் இறால் மீனுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் அதே போல் தற்போது மீனவர்கள் பிடித்து வந்துள்ள மீன்களுக்கு தனியார் மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் உரிய விலை நிர்ணயம் செய்ய மாவட்ட ஆட்சியர் தலைமையில் தனியார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய விலை கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.