‘தித்வா’ சூறாவளியினால் வீடுகளை இழந்த குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடுகளை மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையில் வவுனியா, மருதமடுவில் நடைபெற்றது.
இதன் முதற்கட்டமாக, அனர்த்தத்தினால் வீட்டை இழந்த ஒரு குடும்பத்திற்காக 05 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடொன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.
இதற்குச் சமாந்தரமாக, ‘‘தமக்கென ஓர் இடம் – அழகான வாழ்க்கை’’ எனும் தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் வவுனியா பாரதிபுரம், நெளுக்குளம், தாலிக்குளம் மற்றும் சாலம்பைக்குளம் ஆகிய பகுதிகளிலுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 07 வீடுகளும் பிரதி அமைச்சரின் தலைமையில் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
சொந்தமாக வீடொன்றை நிர்மாணித்துக் கொள்வதற்கு வசதியற்ற, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காகச் செயற்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் தலா ஒரு மில்லியன் ரூபா (10 இலட்சம்) மீள அறவிடப்படாத நிதியுதவியுடன் சுமார் 550 சதுர அடி விஸ்தீரணத்தில் இவ்வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் மாத்திரம் வவுனியா மாவட்டத்தில் வீடற்ற 161 குடும்பங்களுக்குப் புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுக் கையளிக்கப்பட்டுள்ளன.
இதற்காக 161 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட வீடற்ற மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 247 வீடுகள் உள்ளடங்கலாக, அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களின் ஊடாக மாவட்டத்தில் மொத்தம் 428 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய வீடுகளின் நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிகழ்வில் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் அசங்க காஞ்சன, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வவுனியா மாவட்ட முகாமையாளர் தேவிகா விஜேசூரியரத்ன, வவுனியா தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் அமித் சுதர்சன வீரக்கோன் ஆகியோர் உள்ளிட்ட பிரதேசவாசிகள் மற்றும் வீட்டுப் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.
