கியூபெக் மாகாணத்தில் நடைமுறையில் உள்ள சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மைச் சட்டமான பில் 21 இற்கு, கனடாவின் உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று வெளியான இந்தத் தீர்ப்பின்படி, பொதுப் பணிகளில் ஈடுபடுபவர்கள் பணியின்போது மத அடையாளங்களை அணிவதைத் தடைசெய்யும் சட்டத்தின் பெரும்பாலான அம்சங்கள் அரசியலமைப்பிற்கு முரணானவை அல்ல என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
எனினும், கியூபெக் மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் மத அடையாளங்களை அணிவதைத் தடுக்கும் சட்டப் பிரிவு மட்டும் அரசியலமைப்பிற்கு முரணானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பில் 21 சட்டத்தின்படி, ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சில அரசுப் பணியாளர்கள் பணியின்போது ஹிஜாப், தலைப்பாகை, யூதர்களின் யர்முல்கே தொப்பி, சிலுவை மற்றும் கிர்பான் போன்ற மத அடையாளங்களை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கனேடிய அரசியலமைப்பின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கான சாசனத்தின் 33ஆவது பிரிவான ‘Notwithstanding Clause’ எனப்படும் உரிமை மீறல் விலக்கு விதி முக்கிய விவாதப் பொருளாக அமைந்தது.
இந்த விதியின் ஊடாக, மத்திய மற்றும் மாகாண அரசாங்கங்கள் சில அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் அரசியலமைப்புச் சாசனத்தின் அம்சங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒதுக்கி வைத்து சட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். பின்னர் அந்தக் காலப்பகுதியை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கவும் முடியும்.
இந்தத் தீர்ப்பானது, கனடாவில் மாகாண அரசாங்கங்கள் இத்தகைய அரசியலமைப்பு விதியை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பது தொடர்பில் முக்கியமான தெளிவை ஏற்படுத்தியுள்ளதுடன், நாட்டின் அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விவாதத்திலும் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
