இலங்கை வர்த்தக நிறுவனங்களின் வெளிநாட்டு நாணய மாற்று விகித அபாயங்களைக் குறைப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உட்கட்டமைப்புத் துறைகளில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் உலக வங்கி குழுமம் புதிய நிதி வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கமைய, உலக வங்கி குழுமத்தின் IFC மற்றும் HSBC இலங்கை இணைந்து ஆறு வருட கால இலங்கை ரூபா கடன் வசதியொன்றை ஏற்படுத்தியுள்ளன. இதன் பெறுமதி 5 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகரானதாகும்.
இந்த நிதி ஏற்பாட்டின் மூலம், இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமொன்றுக்கு IFC வழங்கும் 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, 10 வருட கால ரூபா கடனுக்கும் ஆதரவு வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் நிறுவனங்கள் தமது வருமானம் ஈட்டும் இலங்கை ரூபாவிலேயே கடன்களைப் பெற்றுக்கொள்ள முடிவதுடன், வெளிநாட்டு நாணய மாற்று விகித ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் நிதி அபாயங்களையும் குறைக்க முடியும்.
ஆசியாவில் முன்னெடுக்கப்படும் முதலாவது இத்தகைய நிதி ஏற்பாடாக இது அமைந்துள்ளதுடன், இலங்கையில் நீண்டகால உள்ளூர் நாணய நிதியுதவியை மேலும் விரிவுபடுத்த உலக வங்கி குழுமம் எதிர்பார்த்துள்ளது.
