ஒரு தசாப்தத்திற்கும் மேலாகப் பொதுமக்களிடையேயும் பொலிஸாரிடையேயும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய தொடர் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் தொடர்பாக, 73 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை மொண்ட்ரியல் பொலிஸ் சேவை (SPVM) கைது செய்துள்ளது.
மொண்ட்ரியலின் தெற்குக் கரைப் பகுதியில் (South Shore) வைத்துக் கைது செய்யப்பட்ட குறித்த நபர், பேர்னார்ட் பிரே (Bernard Bray) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
2006 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், மொண்ட்ரியலின் சில பகுதிகளில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக இவர் மீது பாலியல் வன்கொடுமை, சட்டவிரோதமாகத் தடுத்து வைத்தல் மற்றும் அத்துமீறி உள்நுழைதல் முதலான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
நீண்டகாலமாக முன்னெடுக்கப் பட்டுவரும் இந்த விசாரணையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும், சந்தேகநபரை அடையாளம் காண்பதற்கும் கியூபெக் மாகாணத்தின் தடயவியல் அறிவியல் மற்றும் சட்ட மருத்துவ ஆய்வுக்கூடம் முக்கியப் பங்காற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு காலப்பகுதிகளில் இடம்பெற்ற இத்தாக்குதல்களுக்குப் பின்னணியில் ஒரே நபரே உள்ளார் என்பதை உறுதிப்படுத்துவதற்கு, அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் ஆய்வுக்கூடத்தின் ஒத்துழைப்பும், புலனாய்வாளர்களுக்கு உதவியதாக, மொண்ட்ரியல் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
