இழப்பீட்டு அலுவலகத்தினால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் இழப்பீடு வழங்குதலின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடல் இன்று (04) மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் இழப்பீட்டு அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படும் இழப்பீடு வழங்குவதற்கான புதிய விண்ணப்பங்கள் தொடர்பாகவும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.மோகனபவன், பிரதேச செயலாளர்கள், இழப்பீட்டு அலுவலக மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கலந்துரையாடல் தொடர்பாக மாவட்ட அரசாங்கதிபர் கருத்து தெரிவிதிருந்தார்.
இதுவரை கிளிநொச்சி மாவட்டத்தில் 12,546 குடும்பங்கள் சொத்தழிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெற்றுள்ளனர்.
அத்துடன் உச்சநீதிமன்றத்தில் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு காரணமாக, இதுவரை இந்தப் பயனைப் பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டு, தற்போது 10,800 குடும்பங்கள் மீளவும் அந்தப் படிவங்களைப் பெற்றுள்ளனர். இவர்கள் தங்கள் படிவங்களைப் பூர்த்தி செய்து கிராம சேவையாளர்கள் ஊடாகப் பிரதேச செயலாளரிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டத்தில் காணாமல் போனோர் குடும்பங்களாக 1,225 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டுள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 685 பேர் காணாமல் போனோருக்கான 2 இலட்சம் ரூபா கொடுப்பனவைப் பெற்றுள்ளனர்.
மேலும் வன்செயல் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் கடுங்காயம் அடைந்தவர்கள் என மாவட்டத்தில் இதுவரை 4,999 பேருக்கு கொடுப்பனவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இக்கொடுப்பனவுகள் மற்றும் படிவங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் எவரேனும் இருப்பின், அவர்கள் பிரதேச செயலகத்தையோ அல்லது மாவட்ட செயலகத்தையோ தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
