கியூபெக் மாகாணத்தின் ஷெர்புரூக் (Sherbrooke) நகரில் அமெரிக்க நிறுவனமான ‘கீல் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்’ (Keel Infrastructure) மூலம் அமைக்கப்படவுள்ள பிரம்மாண்ட தரவு மையத் திட்டம் (Data Centre) பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இத்திட்டம் தொடர்பாக நடத்தவிருந்த பொது மக்கள் திறந்தவெளி ஆலோசனைக் கூட்டத்தை அந்நிறுவனம் திடீரென ரத்து செய்துள்ளமை, உள்ளூர் மக்களிடையே அவநம்பிக்கையையும் கடுமையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
ஷெர்புரூக் நகரில் திட்டமிடப்பட்டுள்ள இந்த செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் உயர் செயல்திறன் கணினி மையத் திட்டத்திற்கு எதிராக, பொதுமக்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திட்டத்தின் வெளிப்படைத்தன்மை குறித்து விவாதிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதை அடுத்து, திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்று லாபம் ஈட்டுவதற்காகக் கொண்டுவரப்படும் இத்திட்டத்திற்கு போதிய வெளிப்படைத்தன்மை இல்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

