யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் எதிர்வரும் ஜனவரி 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு தொடர்பான உத்தியோகபூர்வ அறிமுகமும் திட்ட விளக்கக் கூட்டமும் ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் வியாழக்கிழமை (29.10.2026) வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் ஏற்பாட்டில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் தலைமையில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகம் உள்ளிட்ட பங்காளர்களின் ஒத்துழைப்புடன் இம்மாநாடு முன்னெடுக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்தின் உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறிய, நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களுக்குப் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
விவசாயம், பனைசார் உற்பத்திகள், கடலுணவுகள், கைத்தறி, தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுற்றுலா மற்றும் பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இம்மாநாட்டில் முக்கியத்துவம் பெறவுள்ளன.
இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டுச் சந்தைகளையும், ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலுள்ள புலம்பெயர் வர்த்தக வலையமைப்புகளையும் பயன்படுத்தி வாய்ப்புகளை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் ஏற்றுமதி தொடர்பான கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் நேரடி வர்த்தகச் சந்திப்புகள் இடம்பெறவுள்ளன.
குறைந்தது 50 முதல் 75 வரையான நேரடி வணிகத் தொடர்புச் சந்திப்புகளை ஏற்படுத்துவதையும், 75 முதல் 100 வரையான கொள்வனவாளர்களை ஈர்ப்பதையும் இலக்காகக் கொண்டு இது திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், சர்வதேசச் சந்தைத் தகவல்கள், தரச் சான்றிதழ் நடைமுறைகள் மற்றும் ஏற்றுமதி விதிமுறைகள் தொடர்பில் உற்பத்தியாளர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன.
இதன் முன்னேற்பாடாக, எதிர்வரும் நவம்பர் 3, 4ஆம் திகதிகளில் பயிற்சிப் பட்டறைகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திகளைச் சர்வதேசத் தரத்திற்கு உயர்த்தி, புதிய சந்தைகளுக்குள் நுழைவதற்கான வழிகாட்டல்களை வழங்குவது இம்மாநாட்டின் முக்கிய செயற்பாடாக அமையும்.

