வவுனியா, நொச்சிமோட்டை பகுதியில் காலாவதியான 750-க்கும் மேற்பட்ட ஐஸ் கிரீம் கோன்களை விற்பனை செய்து வந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக வவுனியாவில் பாடசாலைகள் உட்பட பல்வேறு பகுதிகளில் இத்தகைய காலாவதியான ஐஸ் கிரீம் கோன்கள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இது குறித்துக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், வவுனியா சிரேஷ்ட பொது சுகாதாரப் பரிசோதகர் கே. மேஜெயா தலைமையில், பொது சுகாதாரப் பரிசோதகர்களான ஏ. விதுர்சன், டி. கோசிகன், எஸ். மதுஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
இச்சோதனையின் போது நொச்சிமோட்டை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 750-க்கும் மேற்பட்ட காலாவதியான ஐஸ் கிரீம் கோன்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளைச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

