மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் தொடர்ந்து இடம்பெற்று வரும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு, பண்ணையாளர்கள் மீதான வன்முறைகள் மற்றும் கால்நடைகள் கொல்லப்படுதல் போன்ற சம்பவங்களைக் கண்டித்தும், நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி திங்கட்கிழமை கச்சேரிக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் வியாழக்கிழமை (29.10.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் இப்போராட்டத்திற்கான பகிரங்க அழைப்பை விடுத்தனர்.
தலைமுறை தலைமுறையாகக் கால்நடை வளர்ப்பை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள மக்களின் பொருளாதார அடித்தளமாக விளங்கும் மேய்ச்சல் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதால், கால்நடைகள் விவசாய நிலங்களுக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டு விவசாயிகளுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையே முரண்பாடுகள் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பண்ணையாளர்கள் கடத்தப்பட்டுத் தாக்கப்படுவதோடு அவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல்கள் நிலவுகின்றன.
ஜனாதிபதி மற்றும் அரச அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டபோதிலும், நீதிமன்றத் தீர்ப்புகள் கூட இதுவரை முறைப்படி நடைமுறைப்படுத்தப்படவில்லை என ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுகளை உடனடியாக அமுல்படுத்துதல், மேய்ச்சல் நிலங்களின் பயன்பாட்டை உறுதிப்படுத்தி வர்த்தமானி பிரகடனம் வெளியிடுதல், சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுத்தல், கால்நடைகள் கொல்லப்படுவதை எதிர்த்துச் சுதந்திரமான விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டித்தல், பண்ணையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் போன்ற பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது வெறுமனே பண்ணையாளர்களுக்கான போராட்டம் மட்டுமல்லாது நில உரிமை, உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான போராட்டம் என்றும் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இப்போராட்டத்திற்குப் பல்வேறு சிவில் சமூக அமைப்புகள், விவசாய மற்றும் மீனவத் தொழிற்சங்கங்கள், வர்த்தகர்கள் சங்கம், மத அமைப்புக்கள் மற்றும் ஊடக அமையம் உள்ளிட்ட பல தரப்புகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளன.
எனவே, நவம்பர் 2ஆம் திகதி இடம்பெறவுள்ள இப்போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

