மட்டக்களப்பில் 1.147 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் வாழைச்சேனையைச் சேர்ந்த 29 வயதுடைய முகமது றிஸ்வி என்பவருக்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்துள்ளார்.
அத்துடன், அவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனைச் செலுத்தத் தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு 1.147 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
அதனையடுத்து வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், 2022ஆம் ஆண்டு இவ்வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
வழக்குத் தொடுநர் சார்பில் அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி. தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், குறித்த நபர் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் கடந்த 14ஆம் திகதி (2026-10-14) இனங்காணப்பட்டு, தண்டனைத் தீர்ப்பு அக்டோபர் 29ஆம் திகதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில், ஹெரோயின் போதைப்பொருள் தன்வசம் வைத்திருந்த முதலாவது குற்றத்திற்கு 7 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்க கட்டளையிடப்பட்டது.
அதேவேளை, ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்ததாக சாட்டப்பட்ட இரண்டாவது குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதாக மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் தனது தீர்ப்பில் கட்டளையிட்டார்.

