கியூபெக் மாகாணத்தில் இந்த ஆண்டு இன்ஃப்ளுவன்சா (Flu) எனப்படும் காய்ச்சல் பருவம் முன்கூட்டியே தொடங்கக்கூடும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளதை அடுத்து, தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான முன்பதிவுகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாண சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, உடல் ரீதியாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள் மற்றும் அவசியமான தேவைக் குழுவினர் விடுமுறைக் காலத்திற்கு முன்பாகவே தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது வசதிக்காக இன்ஃப்ளுவன்சா, கோவிட்-19 மற்றும் சுவாசக் குழாய் நச்சுயிர்ப் பாதிப்பு (RSV) ஆகியவற்றுக்கான தடுப்பூசிகளை, ஒரே மருத்துவச் சந்திப்பின் போதே பெற்றுக் கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எனினும், இந்த ஆண்டு அனைத்து கியூபெக் மக்களுக்கும் இலவசத் தடுப்பூசி வழங்கும் முறை மாற்றப்பட்டுள்ளது.
இதன் கீழ், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோருக்கு மட்டுமே இலவசமாகத் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன.
தகுதியான இந்தப் பிரிவுகளைத் தவிர்த்த மற்ற மாகாண மக்கள் தங்களது சொந்தச் செலவிலேயே தடுப்பூசி பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
