மொன்றியல் நகரின் சுரங்கப்பாதை ரயில் (Metro) வலையமைப்பில் புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், குளிர்காலத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்தவுமே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியல் மேயர் சொராயா மார்டினெஸ் ஃபெராடா (Soraya Martinez Ferrada) இந்த புதிய பாதுகாப்புத் திட்டங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
சுரங்கப்பாதை இரயில் சேவை என்பது பொதுமக்களுக்கு மிகவும் அவசியமான ஒரு சேவை எனவும் இதில் அனைவரும் எவ்வித அச்சமுமின்றி நம்பிக்கையுடன் பயணிக்கக்கூடிய சூழல் உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் மொன்றியல் மேயர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, குளிர்காலம் நெருங்கி வருவதால் சுரங்கப்பாதை நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்றும், குளிரில் இருந்து தற்காத்துக் கொள்ள நாடிவரும் மக்களின் எண்ணிக்கையும் உயரக்கூடும் என்றும், மொன்றியல் மேயர் சொராயா மார்டினெஸ் ஃபெராடா (Soraya Martinez Ferrada) தெரிவித்தார்.
இந்த யதார்த்த நிலையை எதிர்கொள்ள பாதுகாப்பு உணர்வு, தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆதரவு ஆகிய மூன்று முக்கியப் பிரிவுகளில் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
