Montréal நகருக்கு தென்கிழக்கே உள்ள Sainte-Brigide-d’Iberville பகுதியில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2.30 மணியளவில், Highway 10க்கு அருகிலுள்ள Rang des Écossais பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று வயல்வெளியில் விழுந்து தீப்பற்றியுள்ளது.
தகவல் கிடைத்ததும் அவசர சேவைப் பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், ஹெலிகாப்டரில் பயணித்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Sûreté du Québec தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. ஹெலிகாப்டர் வானில் இருந்தபோதே தீப்பற்றியதா அல்லது தரையில் விழுந்த பின்னர் தீப்பற்றியதா என்பதும் விசாரணையில் ஆராயப்பட்டு வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையை Sûreté du Québec-இன் Major Crimes Unit மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, கனடாவின் Transportation Safety Board-க்கும் சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.


