Montréal மற்றும் South Shore பகுதிகளில் நடைபெற்று வரும் உலக சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டிகள் காரணமாக, இன்று பல முக்கிய வீதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
உலக சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டிகள் செப்டம்பர் 19ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக Montréal மற்றும் Montérégie பகுதிகளில் பல்வேறு வீதிகள் மற்றும் பாலங்களில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, Samuel-De Champlain Bridge பகுதியில் இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை குறிப்பிட்ட போக்குவரத்து பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் Montréal மற்றும் South Shore இடையே பயணிக்கும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், போட்டிகளுக்கான சைக்கிள் பாதைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காரணமாக சில முக்கிய வீதிகளில் வாகனப் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் தற்காலிக வீதி மூடல்களும் இடம்பெறுகின்றன.
இதனால் Montréal, Brossard மற்றும் Montérégie பகுதிகளுக்கு இடையே பயணிக்கும் பொதுமக்கள் தங்களது பயண நேரத்தை முன்கூட்டியே திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக போட்டி நடைபெறும் பகுதிகளுக்குச் செல்லும் வாகன ஓட்டிகள், நேரடி போக்குவரத்து நிலவரத்தை Québec 511 மூலம் சரிபார்த்து, தேவையானால் மாற்றுப் பாதைகளைத் தெரிவுசெய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உலக சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டிகள் நாளை செப்டம்பர் 27ஆம் திகதி நிறைவடையவுள்ள நிலையில், Montréal மற்றும் South Shore பகுதிகளில் நாளையும் போக்குவரத்து மாற்றங்கள் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


