மொன்றியலில் வீடற்றோர் பிரச்சினை தொடர்பாக மீண்டும் பெரும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நோற்றர்-டாம் வீதிப் பகுதியில் அமைந்துள்ள வீடற்றோர் முகாமொன்றில், சுமார் ஒரு வயது குழந்தை ஒன்று தனது தாயுடன் இருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செப்டம்பர் 11ஆம் திகதி இந்தக் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் குழந்தை கியூபெக்கின் இளைஞர் பாதுகாப்பு சேவையான DPJ-யிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தைக்கு உடனடி உயிர் அல்லது உடல்நல ஆபத்து எதுவும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மொன்றியல் மேயர் சொராயா மார்டினெஸ் பெராடா, வீடற்றோர் பிரச்சினையை சமாளிப்பதற்கு கியூபெக் அரசாங்கத்திடமிருந்து கூடுதல் ஆதரவு தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வீடற்றோர் பிரச்சினையை எதிர்கொள்ள கியூபெக் அரசாங்கம் 250 மில்லியன் டொலர் அவசர நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது.
இடைக்கால தங்குமிடங்கள், வீட்டு வசதி உதவிகள், மனநல சேவைகள் மற்றும் போதைப்பொருள் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொன்றியலில் வீடற்றோர் எண்ணிக்கை மற்றும் தங்குமிடங்களின் பற்றாக்குறை தொடர்பான விவாதங்கள் தொடரும் நிலையில், இந்த புதிய நடவடிக்கைகள் பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வை ஏற்படுத்தும் என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
