முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்கனவே விடுவிக்கத் தீர்மானித்த 17,469.58ஹெக்டயர் காணிகளையும் உடனடியாக விடுவித்து காணிகளுக்குரிய மக்களிடம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்தக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதேவேளை யுத்தகாலத்தில் மக்களுக்கு காணி ஆவணங்களை எடுத்துச் செல்லக்கூடிய சூழல் இருக்கவில்லை என இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவ்வாறு ஏற்கனவே விடுவிப்பதெனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது மக்களிடமிருந்து ஆவணங்களைக் கோருவதை ஏற்றுக்கொள்ளமுடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வனவளம் மற்றும் வனஜீவராசிகள் திணைளங்களின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்கமுடியுமென ஏற்கனவே
தீர்மானிக்கப்பட்ட 1,231.37 ஹெக்டயர் காணிகளை விடுவிப்பதற்கு, மக்கள் காணி ஆவணங்களை கையளிக்கவேண்டுமென பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இக்கோரிக்கையை வலியுறுத்தினார்.
ஏற்கனவே விடுவிக்கப்பட வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போது ஆவணங்களை காண்பிக்குமாறு கோருவது எவ்வகையில் நியாயம்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, உடனடியாக மக்களுக்கு அந்தக் காணிகளை வழங்க நடவடிக்கை
எடுக்கப்படவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரியுள்ளார்.

