கியூபெக் மாகாண சட்டசபைத் தேர்தலுக்கான முதலாவது தொலைக்காட்சி விவாதத்திற்கு பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஆயத்தமாகி வரும் நிலையில், மாகாணத்தின் பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கான முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை இலக்குவைத்தே, லிபரல் கட்சி, கியூபெக் சோலிடேர் (QS) மற்றும்
பார்ட்டி கியூபெக்குவா (PQ) ஆகிய பிரதான கட்சிகள் இந்த புதிய திட்டங்களை அறிவித்துள்ளன.லிபரல் கட்சியின் தலைவர் சார்லஸ் மில்லியார்ட் (Charles Milliard),கியூபெக் நகரில் தனது கட்சியின் நிதிக் கட்டமைப்பை வெளியிட்டார்.
பொருளாதார யதார்த்த நிலைக்குத் திரும்புதல் என்ற கொள்கையின் கீழ், 2029–30 நிதியாண்டுக்குள் கியூபெக் மாகாண வரவு செலவுத் திட்டத்தைச் சமநிலைப்படுத்துவதாக அவர் உறுதியளித்துள்ளார்.
மாகாணத்தின் 6 பில்லியன் டொலர் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், சுகாதாரம், கல்வி மற்றும் கலாசாரத் துறைகளின்
சேவைகளைப் பாதிப்பில்லாமல் பேணியவாறே, சுமார் 12,000 பொதுச்சேவை பணியிடங்கள் குறைக்கப்படும் எனவும் சட்டவிரோத இணையவழிச் சூதாட்டங்களைக் முறைப்படுத்துதல் மற்றும் வரிக் கடன்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் வருவாய்
அதிகரிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வர்த்தகப் போரினால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகளை எதிர்கொள்ள 4
பில்லியன் டொலர் அவசரகால நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் லிபரல் கட்சியின் தலைவர் சார்லஸ் மில்லியார்ட் வெளியிட்ட திட்டத்தில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குடும்ப வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதற்கான விரிவான
திட்டங்களை கியூபெக் சோலிடேர் கட்சி மற்றும் பார்ட்டி கியூபெக்குவா கட்சி முதலானவை அறிவித்துள்ளன.
ஆளும் கொவாலிசியன் அவனீர் கியூபெக் (CAQ) கட்சியின் தலைவரும் கியூபெக் முதலமைச்சருமான கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette),
நாட்டின் மத்திய கூட்டாட்சிக்குள்ளேயே கியூபெக் மாகாணத்திற்கான கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுத் தரும் தன்னாட்சிக் கொள்கையை
(Autonomist approach) தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

