அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 28 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களுக்கு எதிராக, மத்திய அரசு விதித்த கடுமையான
டாலருக்கு டாலர் (dollar-for-dollar) பதிலடி வரிகள் உத்தியோகபூர்வமாக அமுலுக்கு வந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் இந்த புதிய வரிகள் நடைமுறைக்கு வந்துள்ளதாக, பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம் 22-ஆம் திகதி கனடிய உற்பத்திப் பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விதித்த 50 சதவீத கூடுதல்
வரிக்கான நேரடிப் பதிலடியாகவே கனடா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதிய வரி விதிப்பின் கீழ், இரும்பு (Steel), அலுமினியம், தொழில்துறை இயந்திரங்கள், காகிதப் பொருட்கள், தளபாடங்கள் (Furniture), கடல் உணவுகள், மின்சார உபகரணங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட சுமார் 700 வகையான அமெரிக்கப் பொருட்களுக்கு 15% முதல் 50% வரை இறக்குமதி வரிகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கப் பொருட்களுக்கு மாற்றாகக் கனடாவிலேயே தயாரிக்கப்படும் உள்நாட்டுப் பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும், பல கனடிய வணிகர்கள் இதன் மூலம் கடுமையான செலவீன உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து கனடாவில் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அதிக உற்பத்திச் செலவை எதிர்கொள்ளவுள்ளதாகக் கனடிய சிறு வணிகங்களின் கூட்டமைப்பு (CFIB) கவலை தெரிவிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
வர்த்தகப் போரினால் பாதிக்கப்படும் கனடியத் தொழிலாளர்கள் மற்றும் சிறு, நடுத்தர வணிகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, 7.5 பில்லியன் டொலர்
மதிப்பிலான அவசரகால உதவித் திட்டத்தையும் மத்திய நிதியமைச்சர் பிரான்சுவா-பிலிப் சாம்பேன் அறிவித்துள்ளார்.
இது ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் 25 பில்லியன் டொலர் ஆதரவுத் திட்டங்களுக்கு மேலதிகமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

