கியூபெக் மாகாணத் தேர்தல் பிரச்சாரம் 4-வது நாளை எட்டியுள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைச் செலவின உயர்வை சமாளிப்பதற்கான நிதி வாக்குறுதிகள் மற்றும் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதற்கான கொள்கைகளை பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முன்வைத்துள்ளனர்.
பிரெஞ்சு மொழியின் வீழ்ச்சியைத் தடுக்கும் நோக்கில், பிரபல பிரெஞ்சு மொழிச் சட்டமான Bill 101-ஐ CEGEP கல்லூரிகளுக்கும், ஒரு வருடத்திற்கும் மேலாக மாகாணத்தில் தங்கியிருக்கும் தற்காலிக புலம்பெயர்ந்தோரின் குழந்தைகளுக்கும் விரிவுபடுத்தவுள்ளதாக, பார்ட்டு கியூபெக்வா கட்சி குறிப்பிட்டுள்ளது.
அதிகரித்து வரும் வீடமைப்பு நெருக்கடிக்குத் தீர்வுகாண 7 அம்சத் திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாக கியூபெக் சொலிடேர் கட்சி தெரிவித்துள்ளது.
வாடகை உயர்வுக்குக் கட்டுப்பாடு விதித்தல், சமூக வீடமைப்புத் திட்டங்களை விரிவுபடுத்துதல், சட்டவிரோத ஏர்பிஎன்பி (Airbnb) தளங்களைக் கட்டுப்படுத்துதல் மற்றும் வீடற்றோர் நிலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தேசிய மூலோபாயத்தை உருவாக்குதல் ஆகியவை 7 அம்சத் திட்டத்தில் அடங்கும் என கியூபெக் சொலிடேர் கட்சி கூறியுள்ளது.
தனியார் முதியோர் இல்லங்களில் (RPAs) வாடகை உயர்வுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்றும், வாடகையை உயர்த்த முனையும் இல்ல நிர்வாகங்களே அதற்கான நியாயமான காரணங்களை நிரூபிக்க வேண்டும் என்ற நியதி ஏற்படுத்தப்படும் என்றும் கியூபெக் லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை, தான் ஆட்சிக்கு வருமிடத்து, கியூபெக்கில், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் பழைய ஆடைகள் மீதான மாகாண விற்பனை வரியை (QST) ரத்து செய்வதாகக் கன்சர்வேட்டிவ் கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

