மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நிஜந்தி என்ற 16 வயது சிறுமி பள்ளி சேர்க்கைக்காகச் சென்ற இடத்தில் அவமானப்படுத்தப்பட்டதால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
பிளஸ் 1 வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு நர்சிங் படிப்பில் சேரும் நோக்கில் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளிக்கு தாயாருடன் சென்ற மாணவியை, பள்ளித் தலைமையாசிரியை அவமதித்து சாதிய ரீதியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் தீவிர மன உளைச்சலுக்கு ஆளான அச்சிறுமி, உணவருந்தாமல் தவித்து வந்த நிலையில் தனது வீட்டில் உயிரை மாய்த்துக் கொண்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தலைமையாசிரியைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சோக நிகழ்வுக்குத் தனது எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக எம்பி கனிமொழி, எதிர்கால நம்பிக்கையோடு கல்வி பயிலச் சென்ற குழந்தை அவமானத்தால் தற்கொலைக்குத் தள்ளப்பட்டு உயிரிழந்தது குடும்பத்தையே நிலை குலையச் செய்துள்ளதாக வேதனை வெளியிட்டுள்ளார்.
மேலும், ஒவ்வொரு குழந்தைக்கும் கண்ணியமான, பாதுகாப்பான கல்விச்சூழல் அமைவது அவர்களின் அடிப்படை உரிமை என்றும், இத்தகைய மனவேதனைக்கு எந்தவொரு குழந்தையும் ஆளாகக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கி அரசு நீதியை நிலைநாட்ட வேண்டும் என கனிமொழி எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.

