பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் முதன்முறையாகக் கதாநாயகனாகக் களம் இறங்கி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘டிசி’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் பிரம்மாண்டமாகத் தயாரித்த இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய் மற்றும் கஸ்தூரி ராஜா உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தேவதாஸ் மற்றும் சந்திரா என்ற கதாபாத்திரங்களின் பெயர்களைச் சுருக்கி ‘டிசி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம், ஆகஸ்ட் 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை வாரிக் குவித்தது.
காவல்துறை ஆயுதங்களைக் கொள்ளையடித்துவிட்டுத் தலைமறைவாகும் கேங்ஸ்டர் லோகேஷ் கனகராஜ், எதிர்பாராத சூழலில் வாமிகா கபியைச் சந்தித்து அவருடன் பயணிக்கும்போது எதிர்கொள்ளும் சவால்களையும் போராட்டங்களையும் விறுவிறுப்பான அதிரடிக் காட்சிகளுடன் படம் விவரிக்கிறது.
திரையரங்குகளில் பட்டையைக் கிளப்பிய இத்திரைப்படம் தற்போது ஓடிடி-க்கு வரவுள்ளதால் சினிமா ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

