சவூதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ள “மெக்கா கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில்” இணைவதற்குத் தங்களுக்கு அதிகாரப்பூர்வ அழைப்பு வந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானிய நாடாளுமன்றத்தின் செய்தி நிறுவனமான ‘கானே மெல்லட்’ அமைப்பின் தலைவர் மெஹ்தி ரஹிமி இத்தகவலைத் தெரிவித்து, இந்த முக்கிய அழைப்பு குறித்து ஈரான் அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் வங்கதேசமும் இந்த ஒப்பந்தத்தில் இணைய விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், ஈரானின் இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
இம்மாத தொடக்கத்தில் கையெழுத்தான இந்த மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, இதில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது பிற நாடுகள் தாக்குதல் நடத்தினால், அது அனைத்து உறுப்பு நாடுகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலாகக் கருதப்பட்டு கூட்டாகப் பதிலடி கொடுக்கப்படும்.
எனினும், ஈரானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறித்து ஒப்பந்தத்தில் ஏற்கெனவே அங்கம் வகிக்கும் சவூதி அரேபியா, பாகிஸ்தான் அல்லது துருக்கி ஆகிய நாடுகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித உறுதியளிப்போ அல்லது விளக்கமோ அளிக்கவில்லை.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அரங்கேறி வரும் இந்த திடீர் ராணுவக் கூட்டணி நகர்வுகள் மற்றும் பூகோள அரசியல் மாற்றங்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
வளரும் இந்த புதிய கூட்டணியால் பிராந்திய பாதுகாப்பு மற்றும் வர்த்தகச் சூழலில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன.

