கியூபெக் மாகாணத்தில் உள்ள லாக்-மெகாந்திக் (Lac-Mégantic) நகரின் மையப்பகுதியில் இருந்து சரக்கு ரயில்களை முழுமையாகத் திசைதிருப்பி மாற்றுப் பாதையில் இயக்குவதற்கான ‘புறவழிப்பாதை’ (Rail Bypass) திட்டத்திற்கு, மத்திய போக்குவரத்து ஒழுங்குமுறை முகவரகம், உத்தியோகபூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதன் மூலம் பல ஆண்டுகளாக தாமதமாகி வந்த இத்திட்டத்தின் சட்டரீதியான தடை நீங்கியுள்ளது.
மத்திய போக்குவரத்து முகவரகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, லாக்-மெகாந்திக் நகர மையத்திலிருந்து ரயில்களைத் திசைதிருப்புவதற்காக 12.5 கிலோமீட்டர் நீளமுடைய புதிய ரயில்பாதை மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு நிகழ்ந்த மிக மோசமான ரயில் விபத்தில் 47 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த மாற்றுப் புறவழிப்பாதையை அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு, அதனை அமுல்படுத்துவதற்கான அனுமதி கோரி கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.
அனுமதி கோரப்பட்டு பல ஆண்டுகளின் பின்னர் தற்போது, அத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதிய பாதையினால் அப்பகுதியிலுள்ள பழங்குடியின மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் சார்ந்த தாக்கங்கள், குடிநீர் விநியோகம் மற்றும் நிலத்தடி நீர் பாதிப்புகள் ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டு, விசேட நிபந்தனைகளுடன் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
