இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் பன்னாட்டுக் குற்றக் கும்பல்களுக்கு எதிராக அமெரிக்காவின் FBI மற்றும் கனேடியப் பாதுகாப்புப் படையினர் இணைந்து பாரிய கூட்டு நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் போது, கனடாவில் மூவர் உட்பட உலகளவில் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மொத்தமாக 37 பேர் மீது மூன்று தனித்தனி குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த இரகசியப் புலனாய்வு நடவடிக்கையின் போது, சுமார் 1,000 கிலோகிராம் தூய கொக்கெய்ன் (Cocaine), ஒரு கிலோ ஹெரோயின், பெருமளவிலான துப்பாக்கிகள் மற்றும் 40,000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப் பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலிருந்து கனடா எல்லைக்கு கனரக ட்ரக்குகள் மூலம் வாராந்தம் நூற்றுக்கணக்கான கிலோ போதைப்பொருள் கடத்தப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கடத்தல் வலையமைப்போடு தொடர்புடைய, வான்கூவரைச் சேர்ந்த ரவிந்தர் சிங் தண்டா, சுரே நகரைச் சேர்ந்த ஜஸ்கர்ன் பாக்ரி மற்றும் கிரெஸ்டன் பகுதியைச் சேர்ந்த குர்தேஜ் சிங் ஸ்மாக் ஆகிய மூன்று கனேடியர்கள் உட்பட 11 பேர் மீது, போதைப்பொருள் கடத்தல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

