ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் நாள், கனடா தேசம் ஒருசிறப்புமிக்க தினத்தைக் கொண்டாடுகிறது.அது கனடா தினம். இது வெறும் ஒரு பொது விடுமுறை மட்டுமல்ல, ஒரு தேசத்தின் நீண்ட பயணத்தையும், அதன் அடையாளத்தையும், அதன் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கும் ஒரு நாள்.
1868 ஆம் ஆண்டு முதல் தேசிய விடுமுறையாகக் கொண்டாடப்படும் கனடா தினம், நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள
கனடியர்கள் தங்கள் வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளில் பெருமை கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைகிறது.
1867 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் திகதி, பிரிட்டிஷ் வட அமெரிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் வட அமெரிக்க வரலாற்றில் ஒரு முக்கிய தருணம் உருவானது.இந்த அடிப்படைச் சட்டம் கனடாவை ஒரு கூட்டமைப்பாக உருவாக்கியது.
இது நோவா ஸ்கோஷியா, நியூ பிரன்சுவிக் மற்றும் கனடா மாகாணங்களை ஒரு புதிய கூட்டமைப்பாக இணைத்தது. இந்தச் சட்டம் எதிர்காலத்தில் மற்ற பிரதேசங்கள் இணைவதற்கான வழிவகைகளையும் வகுத்தது.இதன் மூலம் கனடா அட்லாண்டிக் கடலிலிருந்து பசுபிக் கடல் வரை,விரிவடைவதற்கான அடித்தளம் அமைந்தது.
பிரிட்டிஷ் வட அமெரிக்க சட்டம் இந்த உறவை மாற்றியமைத்து, கனடாவை ஒரு டொமினியனாக நிறுவியது. ஒரு டொமினியன் என்பது அதன் சொந்த நிதி அமைப்பு மற்றும்பாதுகாப்புக்கான பொறுப்புடன் கூடிய ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.
டொமினியன் அந்தஸ்தானது, கனடா தனது சொந்த நாடாளுமன்றம், சட்டங்கள் மற்றும் ஆட்சி அமைப்பை நிறுவிக் கொள்வதற்கு,அதிகாரம் அளித்தது
கவர்னர் ஜெனரல் லார்ட் மோன்க் 1868 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி ஒரு பிரகடனத்தை வெளியிட்டார்.
கனடாவில் உள்ள விக்டோரியா மகாராணியின் அனைத்து குடிமக்களும் ஜூலை 1 ஆம் திகதியைக் கொண்டாட வேண்டும் என்று அவர் முறையாகக் கோரினார்.
இது கனடாவின் தேசிய விடுமுறையாக மாறவிருக்கும் நாளின், முதலாவது, முறைசாரா கொண்டாட்டத்துக்கு வழிவகுத்தது.செனட்டர் ராபர்ட் காரல் 1879 இல் ஒரு மசோதாவை நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக முன்மொழிந்தார்.
இந்த மசோதா ஜூலை 1 ஆம் திகதியை ஒரு சட்டப்பூர்வ விடுமுறையாக மாற்றியது. ஆரம்பத்தில் கூட்டமைப்பின் ஆண்டுவிழா என்று அழைக்கப்பட்டாலும், பின்னர் அதிகாரப்பூர்வமாக டொமினியன் தினம் என்று குறிப்பிடப்பட்டது. டொமினியன் தினத்தின் ஆரம்ப ஆண்டுகளில், கொண்டாட்டங்கள் பெரும்பாலும் உள்ளூர் மட்டத்திலேயே, தனிப்பட்ட மாகாணங்கள் மற்றும் சமூகங்களால் ஏற்பாடு செய்யப்பட்டன.
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கனடியர்கள் டொமினியன் தினத்தை அதிகரித்து வரும் முக்கியத்துவத்துடன் தொடர்ந்து கொண்டாடினர்.
1927 இல், 60 வது ஆண்டுவிழா டயமண்ட் ஜூபிலி ஆக டொமினியன்தினம் கொண்டாடப்பட்டது. 1967 இல் கனேடியக் கூட்டமைப்பின் 100 வது ஆண்டுவிழா ஒரு பிரம்மாண்டமான, ஆண்டு முழுவதும் நடைபெற்ற கொண்டாட்டமாக இருந்தது. இதன்போது ஜூலை முதலாம் திகதிக்கு அளவில்லா முக்கியத்துவம் கிடைத்தது.
ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக…, ஜூலை 1 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக டொமினியன் தினம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. இருப்பினும், 1980 களின் முற்பகுதியில், கனடாவின் சுதந்திர நிலையை தெளிவாகப் பிரதிபலிக்கும் ஒரு பெயரை விரும்பும் உணர்வு, மக்கள் மத்தியில் வளர்ந்தது.
பல கனடியர்கள் ஏற்கனவே முறைசாரா முறையில் இந்த விடுமுறையை கனடா தினம் என்று குறிப்பிடத் தொடங்கியிருந்தனர்,
இந்த அதிகாரப்பூர்வ பெயர் மாற்றம் 1982 அக்டோபர் 27 அன்று நிகழ்ந்தது, அன்றிலிருந்து டொமினியன் தினம் அதிகாரப்பூர்வமாக கனடா தினம் ஆனது.
1980 முதல் 1983 வரை, கனடா தின கொண்டாட்டங்களுக்கான அணுகுமுறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் பாரம்பரிய விழாக்களுக்கு அப்பால் கனடா தின விடுமுறையை திட்டமிடுவதற்கு பொறுப்பான
தேசியக் குழு, கனடா முழுவதும் உள்ளூர் கொண்டாட்டங்களை நடைபெறுவதை தீவிரமாக ஊக்குவிக்கவும், நிதி ரீதியாக ஆதரிக்கவும் தொடங்கியது.
இதனால் கனடா தினம், ஒரு நாடு தழுவிய பெரும் கொண்டாட்டமாக மலர்ந்தது. இன்று கனடா தினம் நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுடன் களைகட்டுகிறது. வானவேடிக்கைகள், அணிவகுப்புகள், நேரடி இசை நிகழ்ச்சிகள்,கலாச்சார நிகழ்ச்சிகள், குடும்ப நடவடிக்கைகளான பார்பி க்யூக்கள் மற்றும் பிக்னிக் போன்ற பாரம்பரிய நிகழ்வுகள் கனடா தினத்தின் சிறப்பம்சங்களாகும்.
ஒட்டாவா, டொராண்டோ மற்றும் வான்கூவர் போன்ற பெரிய நகரங்கள் பெரிய அளவிலான நிகழ்வுகளை நடத்துகின்றன. அதே நேரத்தில் சிறிய நகரங்களிலும் சமூகங்களிலும் உள்ளூர் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.கனடாவின் பரந்த நிலப்பரப்பில் வாழும் பல்வேறு சமூகங்களை ஒருபுள்ளியில் இணைக்கும் உணர்ச்சி மிக்க நாளாக இன்றைய கனடாதினம் அமைகின்றது.
ஒரு பசுமையான தேசத்தின் மேப்பிள் மரங்களைச் சுற்றி வீசும் பனிக்காற்றும் இன்று “கனடா தினத்தை” கொண்டாடி மகிழ்கின்றது.
