கியூபெக் மாகாணத்தில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில், மாகாண லிபரல் கட்சியின் (PLQ) அதிகாரப்பூர்வ வேட்பாளராக முன்னாள் சிஏகியூ (CAQ) மாகாண அமைச்சர் பியர் டுபோர் (Pierre Dufour) களம் இறங்குவார் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் தலைவர் சார்லஸ் மில்லியார்ட் (Charles Milliard) இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஆளும் ‘CAQ’ கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த பியர் டுபோரின் இந்த திடீர் அரசியல் மாற்றம், கியூபெக் மாகாண அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அபிடிபி-ஈஸ்ட் தொகுதியின் நீண்டகால அரசியல் முகமான பியர் டுபோர், கடந்த 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆளும் சிஏகியூ (CAQ) கட்சியின் கூட்டணியில் இருந்து, அப்போதைய கியூபெக் முதலமைச்சர் பிரான்சுவா லெகால்டால் (François Legault) நீக்கப்பட்டார்.
அபிடிபி-டெமிஸ்காமிங்கு (Abitibi-Témiscamingue) பிராந்தியத்திற்கு அமைச்சரவையில் முறையான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்று பியர் டுபோர் விடுத்த நிபந்தனையே, இந்த நீக்கத்திற்குக் காரணமாக அமைந்தது.
கட்சியின் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதாகக் கூறி அவர் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கியூபெக் சட்டமன்றத்தில் சுயேச்சை உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், பியர் டுபோர் தற்போது கியூபெக் லிபரல் கட்சியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

