அடுத்த 15 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 10 புதிய அணு உலைகளைக் கட்டமைப்பதற்கான புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய அணுசக்தி மூலோபாய ஆவணத்தை கனேடிய கூட்டாட்சி அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஒன்ராறியோவின் நியூமார்க்கெட் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ஆற்றல் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டிம் ஹாட்ஸன் (Tim Hodgson) இந்த புதிய அணுசக்தி மூலோபாயப் பெருந்திட்டத்தை வெளியிட்டார்.
உலக நாடுகள் ரஷ்யாவிடமிருந்து விலகி வரும் நிலையில், கனடாவின் சொந்த தயாரிப்பான ‘கேண்டு’ (Candu) அணு உலைகளை சர்வதேச சந்தையில் விற்பனை செய்யவும், யுரேனியம் ஏற்றுமதியை இருமடங்காக அதிகரிக்கவும் இந்த உத்தி வழிவகை செய்கிறது.
“25 ஆண்டுகளுக்குள் கார்பன் உமிழ்வற்ற தூய்மையான பொருளாதாரத்தை உருவாக்கவும், மின்சாரக் கட்டமைப்பை (Electricity grid) இருமடங்காக உயர்த்தவும் அணுசக்தி இல்லாமல் வேறு நம்பகமான திட்டங்கள் எதுவும் இல்லை” என்று அமைச்சர் ஹாட்ஸன் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்திற்கு $100 பில்லியன் கனேடிய டொலருக்கும் அதிகமாகச் செலவாகும் என இயற்கை வளங்கள் துறை அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். இந்த மூலோபாயத்தின் கீழ், புதிய அணு உலைகள் ஒன்ராறியோ மாகாணத்திற்குள் மட்டுமே முடங்கிவிடாமல், நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவலாக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


