நாட்டின் முதலாவது பிரம்மாண்ட அதிவேக இரயில் உள்கட்டமைப்புத் திட்டமான ‘ஆல்டோ’ திட்டத்தின் தற்போதைய வரைபடத்தில் ஒரு மிக முக்கியமான பாதையை மாற்றி, ‘கிங்ஸ்டன்’ (Kingston) நகரத்தை அதில் இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
கியூபெக் சிட்டி முதல் டொராண்டோ வரையிலான அதிவேக இரயில் பாதையை அமைக்கும்’ஆல்டோ’ திட்டத்தின் பிரதான வழித்தடத்தை, ஒன்ராறியோ ஏரியின் (Lake Ontario) கரையை ஒட்டி தெற்கு நோக்கி நகர்த்துவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய போக்குவரத்து அமைச்சர் ஸ்டீவன் மெக்கின்னன் (Steven MacKinnon) இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். தொழில்நுட்பச் சாத்தியக்கூறுகள் மற்றும் திட்டத் தேவைகளுக்கு உட்பட்டு, கிங்ஸ்டன் நகரிலும் ஒரு நிறுத்தத்தைக் (Stop) கொண்ட புதிய தெற்கு வழித்தடத் தெரிவை உருவாக்குமாறு தாம் ஆல்டோ நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக, அமைச்சர் மெக்கின்னன் கூறியுள்ளார்.
இதன் மூலம், ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்ட திட்ட வரைபடத்தில் இருந்து விலகி, உள்ளூர் மக்களின் கோரிக்கைக்கு, மத்திய அரசு முன்னுரிமை அளித்துள்ளது தெளிவாகியுள்ளது.


