மொன்றியல் பகுதியில் உள்ள பள்ளிகளில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு உதவி வழங்கி வந்த வகுப்பறை ஆதரவுப் பணியாளர்களின் (Support Staff) எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதனால் புதிய கல்வியாண்டு தொடங்கும் சூழலில், மாற்றுத்திறனாளி மற்றும் விசேட கற்றல் குறைபாடுகள் உடைய ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
கியூபெக் மாகாண அரசு கல்வித்துறைக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைத்ததன் காரணமாகவே, இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
2025-26 கல்வியாண்டில் விசேட தேவையுடைய மாணவர்களின் உதவிக்காகப் புதிதாக 40 கூடுதல் பணியிடங்களை உருவாக்குவதற்கு, ஆங்கிலேய மொன்றியல் பள்ளிச்சபை திட்டமிட்டிருந்தது.
ஆனால், தற்போதைய நிதிக் குறைப்பால், புதிய பணியாளர்களை நியமிக்க முடியாதமை மட்டுமன்றி, ஏற்கனவே இருந்த பணியிடங்களில் மேலும் 24 இடங்களை குறைக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆங்கிலேய மொன்றியல் பள்ளிச்சபை தள்ளப்பட்டுள்ளது.
கியூபெக் மாகாண அரசின் இந்த தன்னிச்சையான நிதி குறைப்பு நடவடிக்கைக்கு எதிராக, ஆங்கிலேய மொன்றியல் பள்ளிச்சபை மற்றும் கியூபெக் ஆங்கிலேய பள்ளி சபைகளின் சங்கம் (QESBA) ஆகியவை இணைந்து, நீதிமன்றத்தில் சட்டப்பூர்வமாகப் போராடப் போவதாக அறிவித்துள்ளன.


